Sunday, 6 December 2015

சாயம்..!!!

சென்னையில்
மழை
வெளுத்துக்
க(கா)ட்டியது
பலரின்
சாயத்தை....!!

நிவா”ரணம்”

ஓராயிரம் ஈராயிரம்
நிவாரணம் ஆற்றிடுமா
இவர்கள் ரணம். ..

மீட்பு...!!!!

ஆட்சி பீடம் வைத்திருப்போர்
சாதிக்க முடியாததை
ஆண்ட்ராய்டு மொபைல்
வைத்திருக்கும் இளைஞர்கள்
சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ..!!!

Tuesday, 24 November 2015

மனிதனும் துணியும் --கண்ணதாசன்



மனித வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு விதமாக விவரித்துச் செல்வர். ஆனால் கவியரசு கண்ணதாசனோ கந்தல் துணியை வைத்து அழகுற விளக்கிச் செல்கிறார்.
மனிதனும் துணியும் ஒன்று. அதன் பிறப்பும் மனிதப் பிறப்பும் ஒத்து வருகின்றது. துணி எவ்வாறு உருவாகிறது என்பதை,

‘‘கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவுசில
கைகள் கனிந்த கனிவுகுடிசை
எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல
இலைகள் இரண்டு வரவு-அதில்
இயற்கை கலந்த அழகு
பருத்தி என்றொரு செடி வளர்ந்தது
பருவப் பெண்ணைப் போலேஅந்தக்
கரிசல் கழனிமேலேஅது
சிரித்த அழகில் காய் வெடித்தது
சின்னக் குழந்தை போலேஅந்த
வண்ணச் செடியின் மேலே!’’
என்று பருத்தி உருவான விதத்தை எடுத்துரைக்கின்றார்.
பருத்தி துணியானது. துணி ஆடையானது. அந்தத் துணி கிழிந்து அடுப்பங்கரைக்கு வந்தது. அவ்வாறு வந்த துணி,
‘‘சலவை செய்து வாசம் போட்டுத்
தங்கம் போல எடுத்து-பின்
அங்கம் பொலிய உடுத்து-தன்
நிலைமை மாறிக் கிழிந்த பின்பு
நிலத்தில் என்னை விடுத்து-சென்றார்
நீண்ட கதை முடித்து’’
என்று தான் வாழ்ந்த வாழ்வை எடுத்துக் கூறுகிறது.
இந்தத் துணியின் நிலைபோன்றதுதான் மனித வாழ்க்கையும். துணி புதிதாக இருக்கும்போது அதனை எவ்வாறு பாதுகாப்போம். எவ்வாறு வைத்துக் கொள்வோம். அது கிழிந்து விட்டால் அதனை நாம் கையாள்கின்ற முறையே வேறு. அதுபோன்று மனிதன் நன்றாக வளமுடன் இருக்கும்போது அவனை அனைவரும் மதித்து வருவர். பொருள் வளம் வீட்டில் குன்றுமாயின் அனைவரும் அவனை விட்டுச் செல்வர். இதுதான் உலக இயல்பு. கவியரசர் கவிதையின் வழி மனித வாழ்வைப் பற்றிய கண்ணோட்டத்தை ,
‘‘சுட்ட சோற்றுப் பானை சட்டி
தூக்கி இறக்க வந்தேன்-என்
தூய உடலைத் தந்தேன்-நிலை
கெட்டுப் போன செல்வர் போலக்
கேள்வியின்றி நின்றேன்இன்று
கேலி வாழ்க்கை கண்டேன்!
என்று எடுத்துரைக்கின்றார். மனிதர்கள் தம் நிலை தாழ்ந்துவிட்டால் அவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள். இதனை உணர்ந்து மக்கள் வாழ வேண்டும் என்ற நீதியை,
‘‘பந்தல் போட்டு மணம் முடித்த
பருவ உடலில் துள்ளிவாழ்ந்த
பழைய கதையைச் சொல்லிஏங்கும்
கந்தல் கதையைக் கேட்ட பின்பும்
காலம் அறிந்து கொள்வீர்! –வாழ்வைக்
காவல் காத்துக் கொள்வீர்!’’
என்று எடுத்துரைக்கின்றார்.
பொருள் இல்லாதவரை உலகம் எப்படியெல்லாம் பார்க்கும்? அவரது நிலை என்ன? அதனை,
‘‘மேனி அழகும் காசு பணமும்
இருக்கும் வரைக்கும் லாபம்அதை
இழந்துவிட்டால் பாபம்! –பின்
ஞானி போலப் பாடவேண்டும்
நாய்களுக்கும் கோபம்அதுதான்
நான் படிக்கும் சோகம்’’
என்று நயம்பட எடுத்துரைக்கின்றார் கவிஞர் கண்ணதாசன்..